Sunday 5th of May 2024 02:32:09 AM GMT

LANGUAGE - TAMIL
-
நியூசிலாந்தில் கடமையில் ஈடுபட்டிருந்த  பொலிஸ் அதிகாரி  சுட்டுக் கொலை!

நியூசிலாந்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை!


நியூசிலாந்தின் - ஆக்லாந்தில் போக்குவரத்து நிறுத்தம் ஒன்றில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவா் இன்று வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதுடன், மற்றொரு பொலிஸ் அதிகாரி பலத்த காயமடைந்தார்.

பொலிஸாரைச் துப்பாக்கியால் சுட்ட நபா் அங்கிருந்து வாகனம் ஒன்றில் தப்பி ஓடிவிட்டார். அவா் தேடப்பட்டு வருகின்றபோதும் இதுவரைக் கைது செய்யப்பட்டாரா? என்பது குறித்துத் தகவல்கள் வெளியாகவில்லை.

துப்பாக்கிச் சூடு நடந்த சுமார் நான்கு மணி நேரத்தின் பின்னா் ஆயுதமேந்திய பொலிஸார் ஒரு வீட்டை முற்றுகையிட்டு சந்தேக நபா்கள் இருவரைக் கைது செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நியூசிலாந்தில் பொலிஸாா் கடமையின்போது பெரும்பாலும் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வதில்லை. அங்கு கடமையின்போது அதிகாரிகள் கொல்லப்படுவது மிகவும் அரிதானது. கடைசியாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவா் சந்தேக நபா் ஒருவரைத் தேடி அவரது வீட்டுக்குச் சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டாா்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து மேற்கு ஆக்லாந்தின் மாஸ்ஸியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பாடசாலைகளை உடனடியாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதேவேளை, பொலிஸ் அதிகாரிகளைச் சுட்டுவிட்டுத் தப்பியோடிய கொலையாளியின் காா் மோதி பொதுமகன் ஒருவரும் காயமடைந்துள்ளாா்.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற நேரத்தில் பொலிஸ் அதிகாரிகள் ஆயுதங்களை வைத்திருக்கவில்லை என நியூசிலாந்து பொலிஸ் ஆணையாளா் ஆண்ட்ரூ கோஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளாா்.

எங்கள் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் கடமைகளின்போது எதிர்கொள்ளும் உண்மையான ஆபத்தை இந்த சம்பவம் கோடிட்டுக் காட்டுகிறது எனவும் அவா் தெரிவித்தாா்.

பொலிஸ் அதிகாரியின் படுகொலை அதிா்ச்சி தரும் செய்தி என இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள நியூசிலாந்து பிரதமா் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க எங்கள் பொலிஸ் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு பொலிஸ் அதிகாரி உயிா் தப்பிக்கொள்ள சுவா் மீது ஏறி குதித்ததைக் கண்டேன் என சம்பவத்தை நேரில் கண்ட ஒருவா் தெரிவித்துள்ளாா்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டவேளை நான் தரையில் விழுந்து படுத்துவிட்டேன். படுத்துக்கொண்டே அங்கே நடப்பவற்றைக் கவனித்தேன். அதன் பின் நான் சுவா் ஏறிக் குறித்து அங்கிருந்து ஓடினேன் எனவும் அவா் கூறியுள்ளாா்.

இந்தச் சம்பவத்தை அடுத்து கடமையின்போது ஆயுதம் ஏந்திச் செல்ல வேண்டும் என்கின்ற குரல்கள் நியூசிலாந்து பொலிஸாா் மத்தியில் அதிகரித்துள்ளன.


Category: உலகம், புதிது
Tags: நியூசிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE